தென்காசியில் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி
தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் தென்காசியில் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் தென்காசியில் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
நம்ம ஊரு சூப்பரு திட்டம்
தமிழக அரசு தற்போது நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாம் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இந்த திட்டம் அமைந்துள்ளது. தென்காசியில் குத்துக்கல்வலசை ஐ.டி. முக்கு பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று கொடி அசைத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்துகிறோம். வருகிற அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் வருகிற 40 நாட்களில் ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளை சுத்தப்படுத்தியும், வாய்க்கால்களை தூர்வாரி நீர் நிலைகளை சீரமைக்கும் பணிகளையும் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்த உள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டும் தங்களது பங்களிப்பினை அளித்தால் போதாது.
தூய்மையான மாவட்டமாக...
பொதுமக்களும் தங்களது பங்களிப்பினை முழுமையாக அளிக்க வேண்டும். இதன் மூலம் நமது மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற முடியும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடி மாவட்டமாக தென்காசி மாவட்டம் திகழ வேண்டும். மேலும் இந்த பகுதி அருகில் அமைந்துள்ள கடைகளில் உள்ள குப்பைகளை தெருவோரங்கள் மற்றும் திறந்த வெளியில் கொட்டாமல் அதற்கென அமைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியே பிரித்து எடுத்து போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு பங்களிப்பினை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் பிரான்சிஸ், உதவி திட்ட அலுவலர் பேச்சியம்மாள், குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், குழந்தை மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.