கோடை விடுமுறைக்கு பின் இன்று திறப்பு பள்ளிகளில் தீவிர தூய்மை பணி
கோடை விடுமுறைக்கு பின் தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி அந்தந்த பள்ளிகளில் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக ஈடுபட்டனர்.
தர்மபுரி:
கோடை விடுமுறைக்கு பின் தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி அந்தந்த பள்ளிகளில் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக ஈடுபட்டனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் 13-ந்் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகிறது.
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அந்தந்த பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மைப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் அமரும் டேபிள், டெஸ்டுகள் தூய்மைப்படுத்தப்பட்டன. பள்ளி வளாகத்தில் தேங்கி கிடந்த குப்பைகள், முட்புதர்கள் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.
முக கவசம் கட்டாயம்
இதனிடையே தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளியில் தூய்மை பணியாளர்கள் முட்புதர்களை அகற்றியும், கிருமிநாசினி தெளித்தும் தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டனர். பள்ளி சுற்று சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்கள் அனைத்தும் கிழித்து தூய்மைப்படுத்தினர்.
கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும். வகுப்பறைகளிலும் மாணவ-மாணவிகள் முககவசம் அணிய ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.