நாமக்கல் கமலாலய குளம் தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்
நாமக்கல் கமலாலய குளத்தை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.
தமிழக அரசின் உத்தரவின்படி நாமக்கல் நகராட்சியில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பல்வேறு தலைப்புகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று துப்புரவு பணி மேற்கொள்ளுதல் என்ற தலைப்பின்கீழ் நாமக்கல் தினசரி சந்தை பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்தல் என்ற தலைப்பில் சாக்கடைகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் நீர்நிலைகள் சுத்தம் செய்தல் என்ற தலைப்பின் கீழ் கமலாலய குளம் தூய்மை செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு நகர் மன்ற தலைவர் கலாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் செண்ணு கிருஷ்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் சிவகுமார், சகுந்தலா, நகராட்சி பொறியாளர் சுகுமார், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பழனிச்சாமி, பாஸ்கர் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சேந்தமங்கலம் சாலையில் மழைநீர் வடிகால் தூய்மை செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.