தூய்மை பணி திட்டம்
மயிலாடுதுறையில் என் குப்பை என் பொறுப்பு தூய்மை பணி திட்டத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளத்தில் தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற மாபெரும் தூய்மை பணி திட்டத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தூய்மை உறுதிமொழி எடுத்தல், செம்மங்குளத்தில் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக "மஞ்சள் பை" அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள், வியாபாரிகளுக்கு நகராட்சியால் வழங்கப்பட்டது. அப்போது கலெக்டர் பேசியதாவதுமயிலாடுதுறை நகராட்சி 27 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட 36 வார்டுகளைக் உள்ளடக்கிய தேர்வுநிலை நகராட்சியாகும். இந்த நகராட்சியில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக ரூ.10 கோடி வரிவசூல் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.மயிலாடுதுறை நகராட்சியை சுத்தமாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீலநிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக குப்பைகளை தனியாகவும் சேகரித்து அவற்றை வீடுதோரும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நீர்நிலைகளில் தூய்மை ஏற்படுத்தும் வகையில் "செம்மங்குளம்' முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மயிலாடுதுறை நகரசபை தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சனல்குமார், வர்த்தக சங்க தலைவர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.