'தினத்தந்தி' செய்தி எதிரொலி; பழனி சண்முகநதியில் தூய்மைப்பணிகள்


தினத்தந்தி செய்தி எதிரொலி; பழனி சண்முகநதியில் தூய்மைப்பணிகள்
x
தினத்தந்தி 26 Feb 2023 2:00 AM IST (Updated: 26 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பழனி சண்முகநதியில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது. ஆர்.டி.ஓ. சிவக்குமாரும் சேர்ந்து சுத்தம் செய்தார்.

திண்டுக்கல்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பழனி சண்முகநதியில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது. ஆர்.டி.ஓ. சிவக்குமாரும் சேர்ந்து சுத்தம் செய்தார்.

'தினத்தந்தி' செய்தி

பழனியில் இருந்து உடுமலைபேட்டை செல்லும் சாலையில் சண்முகநதி உள்ளது. பழனிக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடிய பின் முருகப்பெருமானை தரிசிக்க கோவிலுக்கு செல்கின்றனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களில் கோவில் திருவிழா என்றால் இங்கு வந்துதான் தீர்த்தம் எடுத்து செல்கின்றனர். அந்த வகையில் புண்ணிய நதியாக சண்முகநதி விளங்கி வருகிறது. அதேபோல் பழனி வட்டார பகுதியில் விவசாயம் மற்றும் குடிநீருக்கும் ஆதாரமாக சண்முகநதி உள்ளது.

இத்தகைய சிறப்புபெற்ற சண்முகநதி பகுதியில் படித்துறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. அதேபோல் நதிக்கரை பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் நீராட வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். எனவே பழனி சண்முகநதி பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என கடந்த 23-ந் தேதி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், சண்முகநதியை தூய்மைப்படுத்த பழனி கோவில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி அலுவலர்கள், தீயணைப்பு படைவீரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். மேலும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தூய்மைப்பணி

அதைத்தொடர்ந்து நேற்று சண்முகநதி பகுதியில் பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதில் பழனியாண்டவர் கல்லூரி மாணவ-மாணவிகள், ஊரக வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். அவர்களுடன் சேர்ந்து ஆர்.டி.ஓ.வும் நதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

இந்த பணியின்போது, நதிக்கரையோரம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் கிடந்த பக்தர்களின் பழைய ஆடைகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டது. இதில் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் நதியில் இறங்கி பழைய துணிகளை அகற்றினர். அதேபோல் இயற்கை ஆர்வலர்களும் நதியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் கரை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டது. அந்த வகையில் சுமார் 3 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வரும் நாட்களிலும் போதிய கண்காணிப்பு செய்யப்படும் என்றனர். சண்முகநதி பகுதியில் நடந்த தூய்மை பணியை பொதுமக்கள், பக்தர்கள் மிகவும் வரவேற்றுள்ளனர்.


Next Story