பள்ளிகளில் தூய்மைப்பணி
கோடை விடுமுறை முடிவடைகிற நிலையில் பள்ளிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 12-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் விடுமுறை காரணமாக மூடியிருந்த நிலையில் பள்ளிகளில் சுத்தம் செய்து தூய்மைப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்தந்த தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. வகுப்பறைகள் மற்றும் வளாகப் பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக வர்ணம் பூசும் பணியும் ஆங்காங்கே பள்ளிகளில் நடைபெறுகிறது. மேலும் பள்ளிகளில் மின்சார வயர்கள் ஏதும் பழுதாகி உள்ளதா? கட்டிடங்கள் ஏதும் சேதம் ஏற்பட்டுள்ளதா? என கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வளாகப் பகுதியில் புதர்கள் மண்டி இருந்தால் அதனை அகற்றும் பணியும் நடைபெறுகிறது.
பாடப்புத்தகங்கள்
இதே போல மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்க அந்தந்த பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு நாள் அன்று மாணவர்களுக்கு வழங்கப்படும். புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று வகுப்பறையில் சுத்தம் செய்யப்பட்டது.