தரங்கம்பாடி கடற்கரையில் தூய்மை பணி


தரங்கம்பாடி கடற்கரையில் தூய்மை பணி
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடி கடற்கரையில் நடந்த தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

தரங்கம்பாடி கடற்கரையில் நடந்த தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

தூய்மை பணி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையையொட்டி வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு தினமும் வெளிநாடு, வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலா மையத்தில் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று முழுமையான தூய்மை பணி நடந்தது. இதில் கேரளா மாநில தலைமை தேர்தல் அலுவலர் சஞ்சய் கவுள், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.

தரங்கம்பாடி கடற்கறை

அப்போது மாவட்ட கலெக்டர் மகாபாரதி கேரளா மாநில தலைமை தேர்தல் அலுவலர் சஞ்சய் கவுளுக்கு தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் மஞ்சப்பை வழங்கி பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தூய்மை பணி நடந்து வருகிறது. அந்த வகையில் தரங்கம்பாடி கடற்கரை மற்றும் டேனிஷ் கோட்டை பகுதியில் தற்போது தூய்மை பணி தொடங்கி வைக்கப்பட்டது.

இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், சுற்றுப்பகுதியை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் விரைவில் மறுசீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.

ரூ.7 கோடி மதிப்பில் சாலை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.7 கோடி மதிப்பிலும், பொறையாறு பகுதியில் கீழ மேட்டுப்பாளையம், சோழன் நகர், கழுவுதிட்டு,சிந்தாரிப்பேட்டை புஷ்ப பாலகுரு நகர் சாத்தங்குடி ஆகிய பகுதிகளில் ரூ.2.34 கோடி செலவிலும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார். அப்போது தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் பொன் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல் மாலிக், நகர செயலாளர் முத்து ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story