பெரியகுளம், போடி நகராட்சிகளில் தூய்மை திட்ட விழிப்புணர்வு முகாம்
பெரியகுளம், போடி நகராட்சிகளில் தூய்மை திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பெரியகுளம், போடி நகராட்சிகளில் தூய்மை திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விழிப்புணர்வு முகாம்
பெரியகுளம் நகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரியகுளம் நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பஸ் நிலைய பகுதியில் நேற்று தூய்மை திட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் வீரமுத்துக்குமார் முன்னிலை வகித்தார். நகர்நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, சேகர், அரசு வக்கீல் சிவக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள், வணிகர் சங்க உறுப்பினர்கள், ஆட்டோ, பஸ் டிரைவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தூய்மைக்கான மக்கள் இயக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதன்பிறகு பெரியகுளம் புதிய பஸ் நிலைய பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு வர்ணம் பூசி விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் மற்றும் இயற்கை வர்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டது. இதனை நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகம், நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், சுதந்திர வீதி, வராகநதி கரையோர பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
போடி
இதேபோல் போடியில் நடந்த முகாமிற்கு, நகராட்சி தலைவர் ராஜராஜேசுவரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகராட்சி கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு, போடி மயானக்கரை சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நகராட்சி தலைவரும், தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து தூய்மை பணியை செய்தார். முன்னதாக அனைவரும் தூய்மை திட்ட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சுரேஷ்குமார், அகமது கபீர், கணேசன், தர்மராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.