தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆணையம் அமைக்க வேண்டும்-தேசிய ஆணைய தலைவர் பேட்டி


தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆணையம் அமைக்க வேண்டும்-தேசிய ஆணைய தலைவர் பேட்டி
x

தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் பேட்டியளித்தார்.

மதுரை


தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் பேட்டியளித்தார்.

ஒப்பந்தம் ரத்து

அகில இந்திய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூய்மை பணியாளர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு யாரிடம் புகார் அளிப்பது என்பது தெரியவில்லை. புகார் அளிக்க வேண்டிய அதிகாரி பெயர், செல்போன் எண் ஆகியவற்றை மதுரை கோட்ட ரெயில்வேயில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் தகவல் பலகையில் ஒட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. புகார் தீர்க்கப்படாவிட்டால் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நிர்ணயித்த சம்பளம் ரூ.600-க்கு பதிலாக ரூ.365 மட்டும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அந்த நிறுவனங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

மனு

3 வருடங்களாக வழங்கப்படாத போனசை ஒரு மாத கால அவகாசத்துக்குள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களுக்கான பணத்தை ரெயில்வேயிடம் பெற்று பணியாளர்களுக்கு வழங்காத நிறுவனங்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறவும், இ.எஸ்.ஐ., பி.எப்., நிர்ணயிக்கப்பட்ட சம்பள தொகை ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து பெற்று, சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கி அறிக்கை சமர்ப்பிக்க கோட்ட ரெயில்வேக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரெயில்வே தேர்வு வாரியம் மூலம் ஒப்பந்த பணியாளர்களாக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள், கொரோனாவால் தற்போது வரை பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மனு கொடுத்தால் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

மாநில ஆணையம்

மதுரை ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பிரிவு தூய்மை பணியாளர்களுக்கான சம்பள பிரச்சினை குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு, அரசு பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும் என்று ஆணையத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ரெயில் பெட்டியில் உள்ள கழிப்பறையில் கையால் துப்புரவு பணி செய்யுமாறு பணியாளர்களை ஈடுபடுத்திய ஒப்பந்த நிறுவனத்தின் அனுமதி ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும். தமிழகத்தில் தற்போது வரை 225 பேர் செப்டிக் டேங்க்கில் இறங்கியபோது மரணம் அடைந்துள்ளனர். இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் தூய்மைப்பணியாளர்கள் ஆணையம் இல்லை. இதற்கான நடவடிக்கை எடுக்க தமிழக கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரிடமும் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கோட்ட மேலாளர் அனந்த் உடன் இருந்தார்.


Next Story