கடற்கரை பகுதியில் ரூ.95¾ லட்சத்தில் தூய்மை பணி
கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட சன்செட் பாயிண்ட் பகுதியில் ரூ.95 லட்சம் செலவில் குப்பைகள் அகற்றப்பட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட சன்செட் பாயிண்ட் பகுதியில் ரூ.95 லட்சம் செலவில் குப்பைகள் அகற்றப்பட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வன அதிகாரி இளையராஜா, பேரூராட்சி பொறியாளர் இர்வின் பிரவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தின் பசுமையை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் மட்கும் குப்பை மற்றும் மட்கா குப்பை என தரம் பிரித்து அவற்றில் இருந்து உரம் தயாரிப்பதற்கான முன்னெடுப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெறுகிறது.
குப்பைகள் அகற்றம்
கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட சூரியன் மறையும் கடற்கரை பகுதியில் பல ஆண்டுகளாக கழிவு பொருட்கள் தேங்கியிருப்பதை அப்புறப்படுத்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அனைத்து தரப்பு பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.95.80 லட்சம் மதிப்பில் உயிரி அகழ்வு முறையில் அகற்றுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
தற்போது அந்த பகுதி முற்றிலுமாக சுத்தப்படுத்தப்பட்டு எவ்வித குப்பைகள் இன்றி தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தூய்மைப்படுத்தப்பட்ட பகுதியை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
உறிஞ்சுகுழி
பின்னர் புத்தளம் மற்றும் தென்தாமரைகுளம் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உறிஞ்சுகுழி அமைப்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கழிவுநீர் வெளியே விடப்படாமல் உறிஞ்சுகுழி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு பொது இடங்களில் கழிவுநீர் வெளியேறாமல் உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜய லட்சுமி, உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.