கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த நெகிழி (பாலித்தீன்) குப்பைகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து தூய்மை பணியில் ஈடுபட்டார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்களிலும், அலுவலக வெளிப்புற வளாகத்திலும் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயன்பாடற்ற நிலையில் இருந்த நாற்காலிகள், பொருட்கள் போன்றவையும் அகற்றப்பட்டன.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பணி புரியும் இடங்கள் சுற்றுப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமும் வைத்துக் கொள்ளும் வகையில் இந்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணி குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கூறும்போது, 'சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் முக்கிய பங்காகும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சரால் 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நமது பாதுகாப்புக்கு மட்டுமின்றி எதிர்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு இயற்கைக்கு பாதிப்பு இல்லாத மாற்றுப் பொருட்களையும், வெளியிடங்களுக்கு செல்லும்போது நாம் கட்டாயம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகளையும் பயன்படுத்த வேண்டும்' என்றார். இந்த தூய்மை பணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு வகிக்கும் ரவிச்சந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.