தூய்மை பணியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்க வேண்டும்
தூய்மை பணியாளர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
தூய்மை பணியாளர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனு
தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் உரிமைச் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, அரசு ஊழியர்கள் கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்களின் தூய்மை காவலர்களையும் முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும், கொரோனா காலத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கும் தூய்மை காவலர்களுக்கும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், கிராமப்புற தூய்மை பணியாளருக்கான அரசாணைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை கணக்கிட்டு தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதனை தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில தலைவர் விஜயகுமார் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட நலிந்த கிராமிய கலைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், நலிந்த கிராமியக் கலைஞர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தவேண்டுமென்றும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் பெறுவோர் பட்டியலை தாமதம் இல்லாமல் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தனர்.
நடவடிக்கை
சாலையோர கடைக்காரர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வரும் உணவு விடுதியை அகற்ற வேண்டுமென்றும், சாலையோர கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் அரசு ஆஸ்பத்திரி அருகே இலவசமாக உணவு வழங்கப்படுவது தடையில்லாமல் நீடிக்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
இதேபோல் கீழராஜகுலராமன் பஞ்சாயத்து கிராம பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், பஞ்சாயத்து செயலர் செயல்பாடு பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ளதால் வேறு நபரை நியமித்து பஞ்சாயத்து சிறப்பாக செயல்பட உதவ வேண்டுமாறும் அந்த மனுவில் கோரியுள்ளனர்.