பயிர்க்கடன் வழங்க லஞ்சம் வாங்கிய எழுத்தருக்கு 3 ஆண்டு ஜெயில்
3 ஆண்டு ஜெயில்
பாண்டியம்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எழுத்தருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பயிர்க்கடன்
பெருந்துறை தாலுகாவுக்கு உள்பட்ட பாண்டியம்பாளையத்தில் நல்லாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2011-ம் ஆண்டு வட்டி மானியத்துடன் கூடிய பயிர்க்கடனுக்கு விவசாயிகள் விண்ணப்பித்தனர். அதன்படி பாண்டியம்பாளையம் புதுக்குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பி.சி.குருசாமி என்பவருடைய மகன் சம்பத்குமார், அவரது மனைவி மகேஸ்வரியின் பெயரில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை கூட்டுறவு சங்கத்தின் எழுத்தர் ரமேஷ் என்பவர் பரிசீலனை செய்தார். அவர் சம்பத்குமாரை அழைத்து, வட்டி மானியத்துடன் கூடிய பயிர்க்கடன் பெற ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டார்.
அதை கொடுக்க விரும்பாத சம்பத்குமார், ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை சம்பத்குமாரிடம் வழங்கினார்கள். அந்த பணத்துடன் கடந்த 13-1-2011 அன்று கூட்டுறவு சங்கத்துக்கு சென்ற சம்பத்குமார் எழுத்தர் ரமேசிடம் கொடுத்தார். அவர் பெற்றுக்கொண்டதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து ரமேசை லஞ்ச பணத்துடன் கையும் களவுமாக பிடித்தனர்.
3 ஆண்டு ஜெயில்
இதுகுறித்து ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், குற்றம்சாட்டப்பட்ட எழுத்தர் ரமேஷ் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அவருக்கு 2 பிரிவுகளில் தலா 3 ஆண்டு ஜெயில், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தலைமை மாஜிஸ்திரேட்டு சரவணன் கூறி உள்ளார்.
அதன்படி எழுத்தர் ரமேசுக்கு 3 ஆண்டு ஜெயில், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.