தனியார் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்
தோவாளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழி:
தோவாளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவனம்
தோவாளை மெயின்ரோட்டில் ஒரு கட்டிடத்தின் மாடியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு குளச்சலை சேர்ந்த ஒருவர் மேலாளராக உள்ளார். மேலும் உள்ளூரை சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பெண் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இங்கு தங்க நகை அடகு வைக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. தோவாளை பகுதியை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் அடகு வைத்த நகையை மீட்க நிதிநிறுவனத்துக்கு சென்றார். அப்போது அங்கு நிதிநிறுவன மேலாளர் இல்லை. பணியில் இருந்த ஊழியர்கள் வாடிக்கையாளரின் நகை கடன் கணக்கை பார்த்தபோது அவர் பெற்றுக்கொண்ட தொகையை விட கூடுதல் பணத்துக்கு அடகு வைத்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
ஊழியர் தற்கொலை முயற்சி
அப்போது அங்கு இருந்த ஊழியர்கள், 'எங்களுக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக மேலாளரிடம் தான் கேட்க வேண்டும்' என கூறினர். இதற்கிடையே நிதி நிறுவனத்தில் கூடுதல் தொகைக்கு அடகு வைத்து பணம் மோசடி செய்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதற்கிடையே நிதிநிறுவன மேலாளர் தலைமறைவானார்.
இது ஒருபுறம் இருக்க மாலையில் வீட்டுக்கு சென்ற உள்ளூரை சேர்ந்த பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முற்றுகை
இந்த நிலையில் நேற்று ஏராளமான வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தில் குவிந்தனர். அவர்கள் தங்கள் பெயரில் எவ்வளவு நகை கடன் வைக்கப்பட்டுள்ளது என விசாரிக்க ெதாடங்கினர். அப்போது 15-க்கும் மேற்பட்டவர்கள் பெயரில் கூடுதல் தொகைக்கு அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது ெதரிய வந்தது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மேலும் பல வாடிக்கையாளர்கள் அங்கு கூடி நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி வாடிக்கையாளர்களை கலைந்து போக செய்தனர்.
இதுகுறித்து ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் ஓரிரு நாளில் வந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.
போலீஸ் நிலையத்தில் புகார்
இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிதி நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பு தணிக்கை செய்த போது மேலாளர் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தணிக்கை குழுவினர் மேலாளர் மீது ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்போது மத்திய குற்றபிரிவில் புகார் கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் நகை கடன் பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் ெபரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தனியார் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்