கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசன்:30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடக்கம்
கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசனையொட்டி 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நேற்று தொடங்கி வைத்தார்.
கோத்தகிரி
கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசனையொட்டி 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நேற்று தொடங்கி வைத்தார்.
நேரு பூங்கா
கோத்தகிரி நகரில் பேரூராட்சி சார்பில் நேரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் மலர்த்தோட்டம், அழகிய புல்தரை, ரோஜா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவைகளுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைத்துள்ளது. இந்த பூங்கா பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நேரு பூங்காவையொட்டி புகழ்பெற்ற காந்தி மைதானமும், பூங்கா வளாகத்திலேயே ஆதிவாசி இன மக்களான கோத்தர் இன மக்களின் குல தெய்வமான பழமையான அய்யனார் அம்மனோர் கோவில் அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்கள் பங்கேற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை கொண்டு சிற்பங்களை அமைக்க உள்ளனர். நேரு பூங்கா மற்றும் காய்கறி கண்காட்சியை கண்டு களிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதை முன்னிட்டு பூங்காவை கோடை சீசனுக்குள் மேம்படுத்தி, தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரூ.50 லடசம் ஒதுக்கீடு
இதன் ஒரு பகுதியாக பூங்காவை மேம்படுத்த கோத்தகிரி பேரூராட்சி மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு, பூங்காவை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டும் பணி, கழிப்பிடங்களை புதுப்பிக்கும் பணி, சிறுவர் பூங்காவில் கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி, வண்ண விளக்குகளுடன் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி, நடைபாதைகளை சீரமைத்து வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றன. இதனால் பூங்கா புதுப்பொலிவுடன் திகழ்கிறது. மேலும் பூங்கா நுழைவு வாயிலில் டிக்கெட் கவுண்டர் கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பூங்காவில் தரையில் வளர்ந்துள்ள புல்களை எந்திரங்கள் மூலம் வெட்டி சமன் செய்து, பசுமையாக மாற்ற ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு உள்ளது.
30 ஆயிரம் மலர் நாற்றுகள்
மேலும் கோடை சீசனுக்காக பல்வேறு ரகங்களை சேர்ந்த 30 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மலர் நாற்றுகளை நடவு செய்வதற்காக மண்ணை பதப்படுத்தி, மண்ணுடன் இயற்கை உரத்தை கலந்து மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா கலந்துகொண்டு நாற்றுக்களை நடவு செய்து பணியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத் தலைவர் உமா நாத், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட பேரூராட்சி அலுவலர்கள், மன்ற உறுப்பினர்கள், பூங்கா ஊழியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு மலர் நாற்றுக்களை நடவு செய்தனர். இந்த பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிவடைந்து வரும் மார்ச் மாத தொடக்கத்தில் மலர்கள் பூத்து குலுங்குவதுடன், காய்கறி கண்காட்சிக்கு பூங்கா தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.