மூடப்பட்ட கல்குவாரிகளை திறக்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனு
மூடப்பட்ட கல்குவாரிகளை திறக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
தென்காசி:
மூடப்பட்ட கல்குவாரிகளை திறக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர். மொத்தம் 500 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்தார்.
கல்குவாரி
தென்காசி மாவட்ட கல்குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் 'கல்குவாரிகள் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் மற்றும் இதில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மூடப்பட்டுள்ள கல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.