மூடப்பட்ட சுற்றுலா இடங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு
கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலா இடங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. அங்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா கூறினார்.
சுற்றுலா இடங்கள் மூடல்
'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.
இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இந்த சுற்றுலா இடங்களை பராமரிப்பு பணிக்காக கடந்த 16-ந்தேதி அன்று மூடுவதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் வனத்துறையினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா இடங்கள் மூடப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு சென்ற பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நுழைவு கட்டணம் வசூல்
இந்தநிலையில் மூடப்பட்டுள்ள சுற்றுலா இடங்களை புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் யோகேஷ் குமார் மீனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வாகனங்களின் டிரைவர் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுப்புத்தகம், காப்பீட்டு சான்றிதழ், வாகன மாசு சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் மோயர்பாயிண்ட் பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
மோயர்பாயிண்ட் பகுதியில் வாகன நுழைவுக்கட்டணம் மற்றும் சுற்றுலா இடங்களுக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அரசாணையின்படி வசூல் செய்யப்படும்.
செவ்வாய்க்கிழமை மூடப்படும்
மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்ல ஒரு நாளைக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வாகன நுழைவு அனுமதிச்சீட்டு பெற பழைய கட்டணமே வசூல் செய்யப்படும். அனுமதிச்சீட்டு பெற்ற வாகனத்திற்கு வாகன கட்டணம் தனியாக வசூல் செய்யப்படமாட்டாது. மேலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பைன் மரக்காடு பகுதியில் சுற்றுலா வாகனங்கள் மோதிய விபத்தில் டிரைவர் ஒருவர் பலியானார், 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட சுற்றுலா இ்டங்கள் திறக்கப்பட்டாலும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதற்கு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.