15 டாஸ்மாக் கடைகள் மூடல்
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி 15 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.
15 டாஸ்மாக் கடைகள்
தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 15 டாஸ்மாக் கடைகள் நேற்று நிரந்தரமாக மூடப்பட்டன. இதில் திண்டுக்கல்லில், பழனி சாலையில் புது அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு கடை, மாநகராட்சி 2-வது வார்டு சத்திரம் தெருவில் உள்ள ஒரு கடை, நாகல்நகரில் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள 2 கடைகள், ரவுண்டு ரோடு ஜி.டி.என்.சாலை, பஸ் நிலைய வளாகம் ஆகிய இடங்களில் தலா ஒரு கடை, வத்தலக்குண்டுவில் 2 கடைகள் ஆகியவை நேற்று மூடப்பட்டன.
இதேபோல் ஒட்டன்சத்திரத்தில் 2 கடைகளும், பழனி ரெயில்வே பீடர் ரோடு, சண்முகாநதி அருகில், ஆயக்குடி ஈஸ்வரன் கோவில் தெரு ஆகிய இடங்களில் தலா ஒரு கடையும், வடமதுரை அண்ணாநகர், ஆத்துமேடு கரூர் ரோடு ஆகிய இடங்களில் தலா ஒரு கடையும் என மொத்தம் 15 கடைகள் நேற்று மூடப்பட்டன. மேலும் அந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த 'டாஸ்மாக் மதுபான கடை' என்ற பதாகைகள் அகற்றப்பட்டன. பின்னர் அனைத்து கடைகளிலும் 'இன்று முதல் (22-06-2023) மதுவிற்பனை இல்லை' என்ற வாசகம் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களும் ஒட்டப்பட்டன.
மதுபிரியர்கள் ஏமாற்றம்
இந்த நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் விவரம் குறித்து அறியாத மதுப்பிரியர்கள் வழக்கம் போல் நேற்று அந்தந்த டாஸ்மாக் கடைகள் முன்பு திரண்டனர். அப்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இனிமேல் அந்த கடைகளில் மதுவிற்கப்படாது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனாலும் எப்படியும் மதுபானத்தை குடித்துவிட வேண்டும் என்ற ஆவலில் தொலை தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோக்கி அவர்கள் புறப்பட்டு சென்றனர். திண்டுக்கல்லில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் நாகல்நகரில், ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.
ரெயில் பயணிகள் மகிழ்ச்சி
ஏனென்றால் அந்த கடைகளில் இரவு, பகல் என பாராமல் எந்த நேரத்திலும் மதுவிற்பனை நடந்தது. மதுப்பிரியர்கள் சாலையோரங்களில் மயக்க நிலையில் விழுந்து கிடந்தனர்.
இதுமட்டுமின்றி தாங்கள் வந்த வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர். இதனால் ரெயில்நிலைய சாலை நெரிசலில் தத்தளித்தது. குறிப்பாக நெரிசலில் சிக்கி ரெயில் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள அந்த கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் ரெயில் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீண்டகால விருப்பம்
வத்தலக்குண்டு டென்னிஸ் கிளப் சாலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால் மதுபிரியர்களின் தொல்லையும் அந்த சாலையில் அதிகமாக இருந்தது. அவர்களின் நடவடிக்கை பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் அவதிப்பட்டனர். இதனால் அந்த சாலை வழியாக செல்வதையே பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த கடைகளை மூட வேண்டும் என்பது அங்கு வசிக்கும் மக்களின் நீண்டகால விருப்பமாக இருந்தது.
வெறிச்சோடிய சாலை
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக்கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது அந்த 2 கடைகளையும் மூட உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி நேற்று முதல் 2 கடைகளும் மூடப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் கடைகள் மூடப்பட்டது தெரியாமல், மதுபிரியர்கள் சிலர் அங்கு வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் காண முடிந்தது.
டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் போது, டென்னிஸ் கிளப் சாலையில் அங்கும், இங்குமாக மதுபிரியர்கள் அலைந்து திரிவார்கள். இதனால் அந்த சாலை எப்போது பார்த்தாலும் கூட்டமாக இருக்கும். ஆனால் அங்கிருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் நேற்று அந்த சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
குடோனுக்கு சென்ற மதுபாட்டில்கள்
இதற்கிடையே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் அனைத்தும் லாரிகள் மூலம் முள்ளிப்பாடியில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு எடுத்துச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.