ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை மூடல்


ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை மூடல்
x

பெரும்பாறையில் அனுமதியின்றி செயல்பட்ட ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை மூடப்பட்டது.

திண்டுக்கல்

ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை ஆர்.ஆர். நகரில் தனியாருக்கு சொந்தமான ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு இயக்கப்படுகிற ஜெனரேட்டரால் ஏற்படும் இரைச்சல், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை ஆகியவற்றால் மலைக்கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் வனவிலங்குகள், பறவைகளும் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

எனவே அந்த தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் இ.பெரியசாமியை சந்தித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 3 ஆண்டுகளாக அனுமதியின்றி ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த தொழிற்சாலையை மூட அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்பேரில் தொழிற்சாலை நேற்று மூடப்பட்டது. இதனால் ஆர்.ஆர்.நகர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story