மழையில் மூடைகள் நனைந்ததால் திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் மூடல்


மழையில் மூடைகள் நனைந்ததால் திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் மூடல்
x

திருப்பரங்குன்றம் அருகே மழையில் நெல் மூடைகள் நனைந்ததால் திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் மூடப்பட்டது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே மழையில் நெல் மூடைகள் நனைந்ததால் திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் மூடப்பட்டது.

வாடகையில் நெல் குடோன்

திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சியில் உள்ள அரசு தொற்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாதம் ரூ.28 ஆயிரம் வாடகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரசு நெல் குடோன் திறந்தவெளியில் செயல்பட்டு வந்தது. இங்கு தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் மூலம் விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகளை கொள்முதல் செய்து சேமிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் மூடைகளை ஆலைக்கு கொண்டு சென்று அதை அரைத்து அதன் அரிசியை நியாய விலை கடைகளுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய குடோனில் நெல் மூடைகளுக்கு உரிய பாதுகாப்பு இன்றி இருந்து வந்தது.

மழையில் நனைந்தது

இந்த நிலையில் சமீபத்தில் தொடர் மழை பெய்தது. அதில் சுமார் 8 டன்னுக்கு மேலான நெல் மூடைகள் மழைநீரில் நனைந்து சேதமானது. சில நெல் மூடைகள் மீண்டும் நெல் பயிராக முளைத்தது. இதுதொடர்பாக படத்துடன் "தினத்தந்தி"யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதை அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அன்று கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தோப்பூரில் திறந்தவெளி நெல்சேமிப்பு குடோனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், மழையால் சேதமடையகூடிய நெல் சேமிப்பு குடோனை மூடுமாறு உத்தரவிட்டார். மேலும் பாதுகாப்பான இடத்தில் நெல் சேமிப்பு குடோன் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

15 ஆண்டுக்கு பிறகு மூடல்

இதை தொடர்ந்து தோப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திறந்தவெளியில் செயல்பட்டு வந்த குடோனில் இருந்து கடந்த 3 நாட்களாக நெல் மூடைகளை லாரிகள் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குடோன் அமைக்க பயன்படுத்திய சவுக்கு மரங்கள் உள்பட பொருட்கள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் உணவுப்பொருள் வழங்கல் அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தோப்பூர் குடோன் வாசலில் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது. கே.எம்.எஸ். 2022-2023 பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைப்பதற்கு இந்த இடம் பயன்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்படுகிறது.இவன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மதுரை மண்டலம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story