மாசி மகம் திருவிழாவையொட்டி கும்பகோணத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு -மதுரை ஐகோர்ட்டில் அரசு உறுதி


மாசி மகம் திருவிழாவையொட்டி  கும்பகோணத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு -மதுரை ஐகோர்ட்டில் அரசு உறுதி
x

மாசி மகம் திருவிழாவையொட்டி கும்பகோணத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

மதுரை


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருகிற 6-ந்தேதி மாசி மகாமக திருவிழா நடக்கிறது. இதற்காக கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்கள், 5 பெருமாள் கோவில்களில் கொடியேற்றம் நடந்தது.

இந்த விழாவின்போது சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூடுவதுடன், உள்ளூர் விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2021-ம் ஆண்டில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த ஆண்டு கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூடவும், உள்ளூர் விடுமுறை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாக இதுவரை எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய 8-க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் விழாவின்போது அடைக்கப்படும், என தெரிவித்தார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story