பெரம்பலூரில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்
பெரம்பலூரில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 2 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், வி.களத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கும் நேற்று முன்தினம் முதல் நாளை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12-ந்தேதி அன்று காரை, ஆலத்தூர், பாடாலூர், செங்குணம், எளம்பலூர், உப்போடை, அய்யலூர், சிறுவாச்சூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அன்னமங்கலம், எசனை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் மற்றும் பெரம்பலூர்-ஆத்தூர் ரோடு, பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள தலா 3 டாஸ்மாக் கடைகளுக்கும், சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.