மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்-வருகிற 13-ந் தேதி நடக்கிறது
தர்மபுரி:
மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் வருகிற 13-ந் தேதி தர்மபுரியில் நடக்கிறது.
இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்-அமைச்சர் கோப்பை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், இறகுப்பந்து, கபடி, எறிபந்து, கைப்பந்து போட்டிகள் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். போட்டி நடைபெறும் இடத்துக்கு அன்று காலை 7 மணிக்கு வர வேண்டும்.
இணையதளத்தில் பதிவு
மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நேரடியாக போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். காலதாமதமாக வரும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாது. மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும்.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.