தூத்துக்குடியில் கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கூட்டுறவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடில் கூட்டுறவு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் நேற்று கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க தலைவர் எஸ்.அப்பாத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் ஆர்.பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் ஆர்.ரசல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு 31 சதவீதம் தொகையை 1.1.2022 முதல் வழங்க வேண்டும். அரசு அறிவிப்பின்படி பொது விநியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும். 2 ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள ஈட்டிய விடுப்பு காசாக்கிடும் சலுகையை உடனே வழங்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் 1-ந் தேதி வழங்க வேண்டும். அனைத்து வகை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் அரசு நிதிப் பங்களிப்போடு ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் பெறும் அனைத்து மருத்துவ வசதிகளும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.