மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு பயிற்சி வகுப்பு-கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-ந் தேதி வெளியிட்டது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி நிலையில் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை அறிவித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCGLE03 042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 3-ந் தேதி ஆகும். மேலும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் வருகிற 4-ந் தேதி ஆகும்.
தென் மண்டலத்தில் கணினி அடிப்படையிலான தேர்வு வருகிற ஜூலை மாதம் தமிழ்நாட்டில் 7 மையம், புதுச்சேரியில் ஒரு மையம், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையம், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையம் என மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.