மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காலி பணியிடங்கள்
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
3-ந்தேதி கடைசி நாள்
இப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in http://www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 3-ந் தேதியும், ஆன்லைனில் கட்டணம் செலுத்த 4-ந் தேதியும் கடைசி நாள் ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை மாதம் ஆந்திர மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்பு
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.