அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி
கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் போட்டித்தேர்வுகள் எழுதுவதற்கு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற கல்வியாண்டு முதல் கரூர் மாவட்டம் மாயனூரில் மாவட்ட அரசு மாதிரி பள்ளி இயங்க உள்ளது. இந்த பள்ளி 9 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் நடைபெற உள்ளது. இப்பள்ளி 400 மாணவர்களும், 400 மாணவிகளும் தங்கும் விடுதி வசதியுடன் செயல்பட உள்ளது. இப்பள்ளியில் 19 முதுகலை ஆசிரியர்களும், 10 பட்டதாரி ஆசிரியர்களும் பணிபுரிந்து பாடங்களை நடத்த உள்ளனர்.
ரூ.2¾ கோடி செலவுகள்
அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக அமைக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை தவிர உயர்கல்வி படிப்பதற்கான போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழக அரசு இப்பள்ளியை நடத்த உள்ளது. இந்த பள்ளிக்கு கிட்டத்தட்ட ரூ.2¾ கோடி அளவிற்கு செலவுகள் செய்து ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மிக சிறந்த ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளது.
சிறந்த உணவு, ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. தலைமை ஆசிரியர், பாதுகாவலர் அனைவரும் உங்களுடனே தங்கி இருந்து உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். திறமை வாய்ந்த மாணவ, மாணவிகளை உருவாக்க ஒரு முன் உதாரணமாக இந்த மாதிரி பள்ளி விளங்க உள்ளது. அதேபோல் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் முன்னுதாரணமாக விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.