மண் படிம சேகரிப்பு மூலம் நிலக்கரி ஆய்வு பணி தீவிரம்


மண் படிம சேகரிப்பு மூலம் நிலக்கரி ஆய்வு பணி தீவிரம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் பகுதியில் 3 இடங்களில் ராட்சத துளைபோட்டு மண்படிமங்கள் சேரிக்கப்பட்டு நிலக்கரி ஆய்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பகுதியில் 3 இடங்களில் ராட்சத துளைபோட்டு மண்படிமங்கள் சேரிக்கப்பட்டு நிலக்கரி ஆய்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இயற்கை வளம்

இந்தியாவில் 75 சதவீதம் மின் உற்பத்தி நிலக்கரியிலிருந்து கிடைத்து வருவதாகவும், வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அணுமின் நிலையத்தால் மின் உற்பத்தி செய்யும் போது அதன் கழிவுகளை சரியாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் நிலக்கரியில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் அதிகளவில் செயல்படுத்தப்படுகிறது. நிலக்கரி மின் உற்பத்தியில் அதன் சாம்பல், சிமெண்டு கம்பெனிகளுக்கு பயன்படுகிறது. இதன்காரணமாகவே தமிழகத்தில் நிலக்கரி மின்உற்பத்தி திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.

தற்போதுள்ள நிலக்கரி இருப்பை வைத்து சில ஆண்டுகள் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக புதிய நிலக்கரி வளங்களை கண்டறியும் பணி கடந்த சில ஆண்டுகளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடல்வளம் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்திற்கடியில் இயற்கை எரிவாயு கொட்டி கிடக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எரிவாயு கிணற்றின்மேல் ராமநாதபுரம் மிதந்து கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு இயற்கை வளம் மாவட்டத்தின் மண்ணிற்கு அடியில் கொட்டி கிடக்கிறது. இயற்கை எரிவாயு மட்டுமல்லாது நிலக்கரி வளமும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அடியில் உள்ளதாக கடந்த கால ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நிலக்கரி ஆய்வு

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி, நயினார்கோயில், உத்திரகோசமங்கை, வன்னிவயல் போன்ற பகுதிகளில், நிலக்கரி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது மீண்டும் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மண்ணியல் துறையின் சார்பில் நாக்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மண்ணில் துளையிட்டு நிலக்கரி படிமங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் போலீஸ் பட்டாலியன் அருகே மேற்கண்ட நிறுவனம் தற்போது ராட்சத துளையிடும் எந்திரங்கள் மூலம் குழாய்களை உட்செலுத்தி மண் படிமங்களை எடுத்து வருகிறது. இதற்காக பல நூறு அடி ஆழத்திற்கு துளையிட்டு படிமங்களை சேகரித்து வருகின்றனர்.

தொழில்வளம்

இந்த மண் படிமங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு அதில் நிலக்கரி உள்ளதா என்று கண்டறிந்து அதன் அடிப்படையில் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் அருகே மேலும் ஒரு கிராம பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வில் நிலக்கரி கிடைக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் ராமநாதபுரம் தொழில் வளத்தில் தன்னிறைவு பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.


Next Story