ஈரோட்டில் இருந்து ரெயில் மூலம் மராட்டியம் செல்லும் சண்டைக்கோழிகள்
ஈரோட்டில் இருந்து ரெயில் மூலம் மராட்டிய மாநிலத்திற்கு சண்டைக்கோழிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
ஈரோட்டில் இருந்து ரெயில் மூலம் மராட்டிய மாநிலத்திற்கு சண்டைக்கோழிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
சண்டைக்கோழி
தமிழகத்தில் சேவல் சண்டை போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆர்வமுள்ள பலர் இப்போதும் சண்டைக்கோழிகளை வளர்த்து வருகிறார்கள். இவற்றை வளர்ப்பது மிகவும் கடினமானது ஆகும். சாதாரண கோழிகளை போல் இவற்றை வளர்க்க முடியாது. போதுமான அளவு பயிற்சி இருந்தால் மட்டுமே சண்டைக்கோழிகளை வளர்க்க முடியும்.
இவற்றுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே உணவு கொடுப்பார்கள். தினந்தோறும் நீச்சல் பயிற்சி கொடுக்க வேண்டும். கட்டி போட்டு தான் சண்டை கோழிகளை வளர்க்க வேண்டும் என்று பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனால் பெரும்பாலானோர் இவற்றை வளர்ப்பதில்லை. இட வசதி, போதிய பயிற்சி மற்றும் மிகுந்த ஆர்வம் இருந்தால் மட்டுமே சண்டை கோழிகளை வளர்க்க முடியும்.
சந்தை
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் வாரம் தோறும் புதன் கிழமையில் சந்தை கூடுகிறது. கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தாங்கள் வளர்த்து வரும் நாட்டு சண்டை கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த கோழிகளை மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் நாக்பூர், தும்கி போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி வாங்கி செல்கின்றனர். கவுந்தப்பாடியில் நேற்று நடந்த சந்தைக்கு 300-க்கும் மேற்பட்ட சண்டை கோழிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவை ஒன்று ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
மூங்கில் கூடை
கோழிகளை வாங்கும் வெளி மாநில வியாபாரிகள், அவற்றை சணல் சாக்கு மூட்டையில் கட்டி, பெரிய மூங்கில் கூடையில், 10 முதல், 15 கோழிகள் என அடைத்து கட்டுகின்றனர். பின்னர் அங்கிருந்து கோழிகள் சரக்கு வாகனம் மூலம் ஈரோடு ரெயில் நிலையம் கொண்டு வரப்படுகிறது.
இந்த கோழிகள் 36 மணி நேரம் தொடர்ந்து ரெயிலில் பயணிக்க வேண்டும் என்பதால், ஈரோடு ரெயில் நிலையத்தில் பார்சல் அனுப்பும் பகுதியில் அவற்றுக்கு தேவையான உணவு, ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குகின்றனர். பின்னர் பிரத்யேகமான முறையில் கூடையில் பார்சல் செய்யப்பட்டு, இந்த சண்டை கோழிகள் ஈரோட்டில் இருந்து ரெயில் மூலம் மராட்டிய மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
பயிற்சி
இதுபற்றி மராட்டிய மாநில வியாபாரிகள் கூறியதாவது:-
கவுந்தப்பாடியில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையில் சந்தை நடக்கிறது. அங்கு சண்டைக்கோழிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த கோழிகள் சண்டை கோழியாக வளர்க்க மிகச்சிறந்தவையாக உள்ளன. எனவே இவற்றை மொத்தமாக வாங்கி, ரெயில் மூலம் மராட்டிய மாநிலத்துக்கு கொண்டு செல்கிறோம். அங்கிருந்து பல்வேறு பகுதிக்கும் அனுப்பி வைக்கிறோம்.
இங்கு ரூ.2 ஆயிரத்து 500 முதல், ரூ.3 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கும் சண்டை கோழிகளை அங்கு ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்கிறோம். இவற்றை சமைப்பதற்காக நாங்கள் வாங்கி செல்வதில்லை. தமிழகத்தில் கோழி சண்டைக்கு அனுமதி இல்லை. ஆனால் மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோழி சண்டைக்கு அனுமதி உள்ளது. எனவே இங்கிருந்து வாங்கி செல்லும் சண்டை கோழிக்கு மேலும் பயிற்சி வழங்கி, கோழி சண்டை போட்டிக்கு பயன்படுத்துகிறோம். இவற்றை வாங்கி விற்பனை செய்வதை, நாங்கள் தொழிலாக செய்து வருகிறோம். இன்று (அதாவது நேற்று) மட்டும் 250-க்கும் மேற்பட்ட சண்டைக்கோழிகளை வாங்கி செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.