தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு


தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு
x
திருப்பூர்


தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தேங்காய் விலை வீழ்ச்சி

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்கள் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மதுசூதனன்:-

திருப்பூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் விலை கடந்த சில மாதங்களாக 50 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தேங்காய் மட்டை, தேங்காய் தொட்டி போன்ற பொருட்களுக்கும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.105.90 அறிவித்துள்ளது போதுமானது அல்ல.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை 4 சதவீதம் குறைத்தும், உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட உணவு எண்ணெய்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு செய்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இறக்குமதிக்கான 4 சதவீத வரியை குறைத்து, தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தை கோவைக்கு மாற்றம் செய்ய வேண்டும். தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை துரிதப்படுத்த வேண்டும். தென்னை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.

பயிர்க்கடன் முறையில் மாற்றம்

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து:-

கடந்த ஆட்சி காலத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டது. விவசாயிகள் வாங்கிய வட்டியில்லா பயிர்க்கடனை 1 ஆண்டுக்கு ஒருமுறை சரியான தேதியில் திருப்பி கட்டி மீண்டும் 15 நாள் கால இடைவெளியில் மீண்டும் பயிர்க்கடன் பெற்று வந்தனர். தற்போது அந்த முறையை தமிழக அரசு மாற்றம் செய்து பயிர்களுக்கு தகுந்தாற்போல் 6 மாத கால கெடு, 8 மாத கால கெடு என தரம் பிரித்து கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவதால் பயிர்கடனை செலுத்த விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். கடந்த முறை 1 ஆண்டுக்கு ஒருமுறை வாங்கிய பயிர்கடனை கட்டுவது போல் மாற்றம் செய்து அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 1 ஆண்டுகால பயிர்க்கடனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழ்பவானி விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி அளித்த மனுவில், 'கீழ்பவானி பாசன கால்வாய்களை கான்கிரீட் தளமாக மாற்றக்கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை தூர்வார வேண்டும்' என்றார்.


Next Story