உலக தேங்காய் தின கண்காட்சி
உடுமலை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் உலக தேங்காய் தினத்தையொட்டி தென்னை சார்ந்த கண்காட்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு
1998-ம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2-ந்தேதி உலக தேங்காய் தினமாக அறிவிக்கப்பட்டது. அதிக அளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் இந்தியாவிலும் இந்த நாள் தற்போது உலக தேங்காய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேங்காய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது.
இளநீர், தேங்காய் மட்டுமல்லாமல் கொப்பரை, தென்னங் கருப்பட்டி போன்ற பொருட்கள் மூலமும் விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் உலக தேங்காய் தினமான நேற்று தேங்காயின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தேங்காயிலிருந்து மதிப்புக் கூட்டும் பொருட்கள் உற்பத்தியின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் வழிகாட்டல்கள் வழங்கும் வகையிலும் கண்காட்சி நடைபெற்றது.
நுண்ணூட்டச் சத்துக்கள்
கண்காட்சியில் தென்னையின் வகைகள், தென்னை சாகுபடியில் களைகளை அகற்றும் முறைகள், ஊடுபயிர் சாகுபடி மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் வழிகள், தென்னையில் பூச்சி தாக்குதல் அவற்றின் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் வழிகாட்டல்கள் வழங்கினர்.
உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கலந்து கொண்டு தென்னையில் நுண்ணூட்டச் சத்துக்களின் அவசியம், உயிர் உரங்கள், நோய்த் தடுப்பு முறைகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் விளக்குப் பொறி, மஞ்சள் நிற ஒட்டும் பொறி, இனக்கவர்ச்சிப் பொறி ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
மேலும் தென்னையில் மதிப்புக் கூட்டும் பொருட்களான கொப்பரை, விர்ஜின் தேங்காய் எண்ணெய், தேங்காய் பவுடர், தேங்காய் சர்க்கரை, தேங்காய் எண்ணெய் சோப் உள்ளிட்ட பொருட்கள் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. கண்காட்சியை வேளாண்மைத்துறையினர், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.