தேங்காய் விலை சரிவு
தேங்காய் விலை சரிவு
போடிப்பட்டி
தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தேங்காய், இளநீர் உள்ளிட்டவை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர ரசாயனப் பயன்பாடில்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் தேங்காய்கள் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது உடுமலை பகுதியில் கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்டவை சாகுபடி செய்வதைத் தவிர்த்து பல விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தென்னை சாகுபடிப் பரப்பு அதிகரித்து படிப்படியாக தேங்காய் உற்பத்தி உயர்ந்து வருகிறது.இந்தநிலையில் தேங்காய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது விவசாயிகளுக்கு வேதனையைத் தருவதாக உள்ளது.
தேங்காய்க்கு ஆதார விலை
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-
இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை, கூலி ஆட்கள் பற்றாக்குறை போன்றவை விவசாயிகளுக்கு சிக்கலை உண்டாக்கி வருகிறது.தென்னை சாகுபடி லாபகரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் தென்னை சாகுபடியில் இறங்கியுள்ள நிலையில் தேங்காய் விலை குறைவு கடும் பாதிப்பை உண்டாக்குகிறது.ஒரு கிலோ தேங்காய் தற்போது ரூ. 20-க்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சராசரி அளவு கொண்ட ஒரு தேங்காயின் கொள்முதல் விலை ரூ. 8 க்கும் குறைவாகவே உள்ளது.அதேநேரத்தில் ஒரு தேங்காய்க்கான பறி கூலி, சேகரிக்க, உரிக்க, லாரியில் ஏற்ற என ரூ. 3 வரை செலவாகிறது.
இதனால் தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காமல் பல விவசாயிகள் அவற்றை தென்னந்தோப்புகளில் குவித்து வைத்துள்ளனர். தேங்காய் விலை மட்டுமல்லாமல் கொப்பரை விலையும் குறைந்து வருகிறது.வெளி சந்தையில் ஒரு கிலோ கொப்பரை ரூ 80 க்கும் குறைவாக விற்பனையாகும் நிலையில் அரசு கொள்முதல் மையங்கள் மூலம் ரூ. 105.90 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் தேங்காயை காய வைப்பதற்கான களம், கூலி ஆட்கள் போன்ற பிரச்சினைகளால் எல்லா விவசாயிகளாலும் கொப்பரை உற்பத்தி செய்ய முடியாது.எனவே கொப்பரை கொள்முதல் செய்வது போல தேங்காய்க்கு ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். இதன்மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படுவதுடன் வெளி சந்தையில் தேங்காய் விலை உயர்வதற்கு வாய்ப்பு உருவாகும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.