தேங்காய்களை உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம்
கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150 விலை நிர்ணயம் செய்யக்கோரி பட்டுக்கோட்டையில் தேங்காய்களை உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருச்சிற்றம்பலம்,
கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150 விலை நிர்ணயம் செய்யக்கோரி பட்டுக்கோட்டையில் தேங்காய்களை உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
கொப்பரை கிலோ ரூ.150 விலை நிர்ணயம்
உரித்த தேங்காய்களை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.150-ம், உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50-ம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கொப்பரை கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களிலேயே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். பாமாயில் இறக்குமதியை நிறுத்த வேண்டும்.கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணையை வழங்க வேண்டும், தேங்காய் புண்ணாக்கு என்ற பெயரில் இறக்குமதியாகும் எண்ணெய் கொப்பரை மீதான இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும்.
தேங்காய் உடைக்கும் போராட்டம்
பட்டுக்கோட்டையை மையமாகக்கொண்டு தென்னை சார் பொருட்களை மூலதனமாகக் கொண்ட தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தென்னை விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த போராட்டம் நேற்று நடந்தது.
தேங்காயுடன் ஊர்வலம் வந்த விவசாயிகள்
போராட்ட பொறுப்பாளர்களான வக்கீல் ராமசாமி, கந்தசாமி, தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலசுந்தரம், பாஸ்கர் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர்.முன்னதாக பட்டுக்கோட்டை அறந்தாங்கி முக்கம் காந்தி சிலை அருகில் இருந்து பட்டுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தென்னை விவசாயிகள் தேங்காயுடன் ஊர்வலமாக பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தை சென்றடைந்தனர்.
சாலையில் உடைத்தனர்
அங்குள்ள பெரியார் சிலை அருகில் தென்னை விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மாசிலாமணி, பொருளாளர் பழனிவேல், தென்னை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கோடீஸ்வரன், பொருளாளர் துறவிக் காடு செல்வராஜ் மற்றும் டாக்டர் செல்லப்பன் உள்பட பலர் தென்னை விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில, அரசுகள் உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என பேசினர்.
திரளான விவசாயிகள்
இந்த போராட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளை சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம், தென்னை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், தஞ்சை மாவட்ட அனைத்து விவசாய சங்கத்தினர் செய்திருந்தனர்.