தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னை விவசாயிகள்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் காந்தி தலைமையில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தேங்காயையும், தேங்காய் எண்ணெயையும் தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருள் தயாரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கொப்பரை கொள்முதலுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.
கொள்முதல் நிலையம்
தேங்காய் அதிகம் விளையும் பகுதிகளில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தேங்காய் நார் தொழில்களை காக்க வேண்டும். மதிப்புக்கூட்டப்பட்ட தேங்காய் பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவி செய்ய வேண்டும். தென்னை சார்ந்த தொழில்பூங்கா அமைக்க வேண்டும். தென்னங்கன்றுகளுக்கு பராமரிப்பு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் ரத்தினகுமார், மகிழங்கோட்டை ராஜேந்திரன், சுப்புரமணியன், பாலகிருஷ்ணன், சிதம்பரம், அடைக்கலம், வேலுசாமி, கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.