ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல்
வேதாரண்யம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும், இதற்கு விவசாயிகள் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும், இதற்கு விவசாயிகள் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனை குழு செயலாளர் ரமேஷ், விற்பனை கூட கண்காணிப்பாளர் சங்கர் ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொப்பரை தேங்காய் கொள்முதல்
வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் மூலம் நாகை மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்படி கொப்பரை தேங்காய் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வேதாரண்யம் வட்டார விவசாயிகள் தங்களுடைய ஆதார், சிட்டா அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் விற்பனை கூடத்தில் பதிவு செய்து, கொப்பரை தேங்காயை விற்பனை செய்து பயன் பெற வேண்டும்.
குடோன்கள்
விற்பனை கூடத்தில் 500 டன் கொள்ளளவு கொண்ட 2 குடோன்கள் உள்ளன. விவசாயிகள் அறுவடை காலங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும்போது தங்களுடைய விளைபொருள்களை இங்கு உள்ள குடோன்களில் இருப்பு வைத்து கொள்ளலாம்.
இவ்வாறு இருப்பு வைத்து சிறு விவசாயிகள் 75 சதவீதமும், பெரிய விவசாயிகள் 50 சதவீதமும் பொருளீட்டுக் கடனாக பெறலாம். அந்த தொகைக்கு 5 சதவீதமும் வட்டி வசூல் செய்யப்படுகிறது. 180 நாட்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.