விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா


விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 8 Sept 2023 1:00 AM IST (Updated: 8 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தின் சார்பில் உலக தென்னை தினம் நேற்று நடந்தது. அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ் தலைமை தாங்கி பேசினார். சி.எஸ்.ஐ.ஆர். தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி விஜய் ஆனந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமையலுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு நன்மை தருவது, தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

மாவட்டத்தின் தென்னை சாகுபடியின் முன்னோடி விவசாயி கென்னடி பங்கேற்று விவசாயிகளுக்கு தென்னை சார்ந்த தொழில்கள் குறித்து எடுத்துரைத்தார். தின்னூர் கிராமத்தை சேர்ந்த கலைமணி, வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம் வழங்கப்படும் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடித்து பயன்பெற அறிவுறுத்தினார். வேளாண்மை அறிவியல் மையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் உதயன், தென்னை ரகத் தேர்வு மற்றும் நடவு முறைகள் குறித்தும், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ்பாபு, தென்னை சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் பூமதி, தென்னையில் மதிப்புக் கூட்டுதல் குறித்தும், திட்ட உதவியாளர் (வேளாண் பொறியியல்) முகமதுஇஸ்மாயில் தென்னை சாகுபடியில் பண்ணை இயந்திரங்களை பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதில் வேளாண்மை அறிவியல் மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 150 விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story