கனரக வாகனங்களில் திறந்த வெளியில் ஏற்றிச்செல்லும் தேங்காய் நார் பஞ்சுகள்


கனரக வாகனங்களில் திறந்த வெளியில் ஏற்றிச்செல்லும் தேங்காய் நார் பஞ்சுகள்
x

பேராவூரணி பகுதியில் ஆபத்தை உணராமல் கனரக வாகனங்களில் திறந்த வெளியில் ஏற்றிச்செல்லும் தேங்காய் நார் பஞ்சுகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

பேராவூரணி, ஏப்.6-

பேராவூரணி பகுதியில் ஆபத்தை உணராமல் கனரக வாகனங்களில் திறந்த வெளியில் ஏற்றிச்செல்லும் தேங்காய் நார் பஞ்சுகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய் நார் பஞ்சு

பேராவூரணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தேங்காய் நார் பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு தேங்காய் நார் பஞ்சுகள் கட்டு கட்டாக கனரக வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுகிறது. இதன் மூலம் கயிறு, மெத்தை, கால் மிதியடி போன்ற பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.கடந்த கஜா புயலின் போது இப்பகுதியில் வீசிய காற்றின் வேகத்தில் பல தேங்காய் நார் பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலைகள் சுக்கு நூறாகி போனது, அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக இந்த தேங்காய் நார் பஞ்சு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வந்தது.

திறந்த வெளியில்...

தேங்காய் நார் பஞ்சு தயாரிக்கும் தொழில் கடந்த ஒரு வருடமாக நலிவடைந்த நிலையில் இருந்து, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கியுள்ளது. தேங்காய் நார் பஞ்சுகளை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, பேராவூரணி, ரெட்டவயல் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் விலைக்கு வாங்கி கண்டெய்னர் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.கடந்த ஒரு மாத காலமாகவே பேராவூரணி பகுதியில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில் தேங்காய் நார் பஞ்சுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து பஞ்சு கட்டுகள், கனரக மற்றும் சிறிய வாகனங்களில் மூலம் திறந்த வெளியில் ஏற்றி செல்லப்படுகிறது.

தார்ப்பாய் சுற்றி...

இந்த பஞ்சு கட்டுகள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருளாக இருப்பதால் இதனால் ஏற்படும் ஆபத்தை உணராமல் சாலைகளில் செல்லும் போது தாழ்வான மின் கம்பிகளில் உரசும்போதும் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது.மேலும் சாலைகளில் இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் மீது இந்த பஞ்சு கட்டுகளில் இருந்து வரும் தூசிகள் படுவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறும் நிலையும் ஏற்படுகிறது. எனவே கனரக மற்றும் சிறிய வாகனங்களில் பஞ்சு கட்டுகளை மற்றும் தேங்காய் நார் பஞ்சுகளில் இருந்து எடுக்கப்படும் பித்து ஆகியவற்றை வாகனங்களில் எடுத்து செல்லும் பொழுது தார்ப்பாயை சுற்றி எடுத்து செல்ல வேண்டும். இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story