சாணார்பட்டி பகுதியில் விலை வீழ்ச்சியால் தேங்காய்கள் தேக்கம்


சாணார்பட்டி பகுதியில் விலை வீழ்ச்சியால் தேங்காய்கள் தேக்கம்
x
தினத்தந்தி 5 July 2023 2:30 AM IST (Updated: 5 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி பகுதியில் விலை வீழ்ச்சியால் தோட்டம், குடோன்களில் தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.

திண்டுக்கல்

சாணார்பட்டி பகுதியில் விலை வீழ்ச்சியால் தோட்டம், குடோன்களில் தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.

விலை வீழ்ச்சி

சாணார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கோபால்பட்டி, செங்குறிச்சி, ராஜக்காபட்டி, வேம்பார்பட்டி, அய்யாபட்டி, கணவாய்பட்டி, அஞ்சுகுளிபட்டி, எமக்கலாபுரம், தவசிமடை, மணியகாரன்பட்டி, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் தனிச்சுவை உடையது. இதனால் இப்பகுதி தேங்காய்களுக்கு புதுடெல்லி, குஜராத், மராட்டியம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தனி கிராக்கி உள்ளது. இதனால் தினமும் டன் கணக்கில் இங்கிருந்து தேங்காய்கள் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.10 என்ற விலையில் தோப்புகளில் இருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் நாளடைவில் விளைச்சல் அதிகரிப்பு, வடமாநிலங்களில் தேங்காய்கள் தேவை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் சாணார்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்தது. அதன்படி, தற்போது பெரிய தேங்காய் ரூ.6 முதல் ரூ.7 வரையிலும், சிறிய தேங்காய் ரூ.4-க்கும் விற்பனையாகிறது. இதனால் தேங்காய் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தேங்காய்கள் தேக்கம்

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறும்போது, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்ததால் அதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் காய்கறிகள் விலை குறையும்போது அதிகாரிகள் இந்த வேகத்தை காட்டுவதில்லை. தற்போது தேங்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் சாணார்பட்டி பகுதியில் பல்வேறு தோப்பு, குடோன்களில் தேங்காய்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன.

எனவே தேங்காய்க்கு நிலையான விலை கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய், தென்னை நார் உற்பத்தி உள்ளிட்ட தென்னை சார்ந்த பொருட்களின் விற்பனையை உலகம் முழுவதும் சந்தைப்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பாமாயில் பயன்பாட்டை குறைத்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் தேங்காய் விலை உயர நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றனர்.


Next Story