கோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்தனர். ஜமேஷா முபின் வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடிமருந்து உள்பட 109 வகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜமேஷா முபின் மற்றும் சிலர் 3 கோவில்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. இந்த நிலையில் அந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் ரீதியாக பரபரப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வராமல் தமிழக காவல்துறையின் உளவுத்துறை கோட்டை விட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில் கோவை கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட போலீசாரை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து, மெச்சத்தக்க பணி மேற்கொண்டதாக அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கண்காணிப்பு நடவடிக்கை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை மாநகரில் கடந்த 23.10.2022 அன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டுவிடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த அன்று அதிகாலை வேளையில் அப்பகுதியில் விழிப்புடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை கண்டவுடன் ஜமேஷா முபினால் மேலும் அவ்வழியே தொடர்ந்து காரை செலுத்த இயலவில்லை.
இதனைத்தொடர்ந்து அவ்விடத்திலேயே கார் சிலிண்டர் வெடித்து அவரும் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் காரணமாகவும், காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்றியதன் காரணமாகவும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிர்க்கப்பட்டுள்ளது.
உள்நோக்கம்
ஒரு சில நபர்கள் உள்நோக்கத்துடன் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக தடுக்கப்பட்டு, தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நிலைமை திறம்பட கையாளப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் தனிப்படைகள் மூலம் புலன் விசாரணை முடுக்கிவிடப்பட்டு 148 தடயங்கள் சேகரிக்கப்பட்டு, வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அச்சம்பவம் தொடர்பாக 5 பேர் 24.10.2022 அன்றே கைது செய்யப்பட்டனர். மறுநாள் 6-வது நபரும் கைது செய்யப்பட்டார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழும் நடவடிக்கைகள் அடுத்த தினமே (25.10.2022) மேற்கொள்ளப்பட்டன.
மெச்சத்தகுந்த பணி
இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறையினரின் பணி போற்றத்தக்கதாகும். அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி சமூக அமைதியை நிலைநாட்டும் வண்ணம், சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சேவையாற்றிய காவல்துறையினரின் மெச்சத்தகுந்த இப்பணியையும் நற்செயலையும் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 58 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை 31-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.