கோவை கார் வெடிப்பு சம்பவம்: நெல்லையில் 4 வீடுகளில் போலீசார் சோதனை


கோவை கார் வெடிப்பு சம்பவம்: நெல்லையில் 4 வீடுகளில் போலீசார் சோதனை
x

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லையில் மேலும் 4 வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

திருநெல்வேலி

கோவையில் சமீபத்தில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாவட்டத்தில் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 27-ந் தேதி நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது உசேன் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதுபோல் ஏர்வாடியிலும் சோதனை நடத்தப்பட்டது.

நேற்று காலையில் மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் மேலப்பாளையம் பகுதிக்கு சென்றனர். அங்கு நத்தம் வாய்க்கால் பாலம் அருகே உள்ள சமயனகாதர் மூப்பன் தெருவை சேர்ந்த சாதிக் முகமதுஅலி (வயது 35), செய்யது முகமது புகாரி (36), முகமது அலி (48), முகமது இப்ராகிம் (40) ஆகியோர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை பகல் 12.10 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால், இந்த சோதனையின்போது எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும், கார் வெடிப்பு சம்பந்தமாக சந்தேகத்தின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் போலீசாருடன் சோதனை குறித்து ஆலோசனை நடத்தினார். மேலப்பாளையத்தில் இவர்கள் 4 பேர் வீடுகளிலும் கடந்த 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் மேலும் 4 வீடுகளில் போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story