கோவை சம்பவம் எதிரொலி: கரூர் ரெயில் நிலையத்தில் வாகனங்களை ரெயில்வே போலீசார் சோதனை
கோவை சம்பவம் எதிரொலியாக கரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.
கார் வெடித்தது
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நேற்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெயில்வே போலீசார் சோதனை
இந்த சம்பவம் எதிரொலியாக கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.கரூர் ரெயில்வே நிலைய ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் நாயுடு மற்றும் ஜி.ஆர்.பி. எஸ்.எஸ்.ஐ. சண்முகம் தலைமையிலான போலீசார் கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களையும், கரூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் வாகனங்களையும் சோதனையிட்டனர்.