கோவை ரியல் எஸ்டேட் அதிபரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை


கோவை ரியல் எஸ்டேட் அதிபரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
x

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவை ரியல் எஸ்டேட் அதிபரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

திருச்சி

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவை ரியல் எஸ்டேட் அதிபரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

ராமஜெயம் கொலை வழக்கு

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலையில் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி-கல்லணை சாலையில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி கரையோரம் கிடந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் 10 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாத நிலையில் தற்போது, கோர்ட்டு உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

உண்மை கண்டறியும் சோதனை

இந்த குழுவினர் திருச்சியை சேர்ந்த 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதில் ஒருவரை தவிர மற்ற 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6 உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் 12 பேருக்கும் கடந்த மாதம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

இதில் 12 பேருக்கு நடைபெற்ற உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான அனைத்தையும் அறிக்கையாக தயார் செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வழங்க இருக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மேற்கொள்வார்கள்.

ரியல்எஸ்டேட் அதிபரிடம் விசாரணை

இந்த நிலையில் கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசோக்குமார் என்பவர் உண்மை கண்டறியும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட 12 பேருடன் செல்போன் எண் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு சிறப்பு புலனாய்வுக்குழு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து அசோக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பயணியர் மாளிகையில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகை தந்தார். பின்னர் அவரிடம் மதியம் 12.30 மணி வரை விசாரணை நடந்தது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் இது போன்ற விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்தனர்.


Next Story