நெருக்கடியில் சிக்கிதவிக்கும் தென்னை நார் உற்பத்தி
நெருக்கடியில் சிக்கிதவிக்கும் தென்னை நார் உற்பத்தி
குடிமங்கலம்
தமிழகத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டைகளில் இருந்து தென்னை நார் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேங்காய் மட்டையை மதிப்பு கூட்டப்பட்ட தென்னைநாராக மாற்றி பண்டல், பண்டல்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு 900 டன் தென்னை நார் மற்றும் தென்னை நார்கட்டிகள் உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதியும், உள்நாட்டில் ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகமும் நடக்கிறது. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் உற்பத்தியாகும் 90 சதவீதம் தென்னை நார் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த காலங்களில் கூலி ஆட்கள் மூலம் தென்னை நார் உலர வைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் பிறகு கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் முற்றிலும் எந்திரமயமாக்கப்பட்டன. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ரூ.2 கோடி வரை செலவு பிடிக்கும் என்கிறார்கள் தென்னை நார்உற்பத்தியாளர்கள். தேங்காய் மட்டைகள் எந்திரத்தின் மூலம் பிரித்து எடுக்கப்பட்டு முதல், இரண்டாம் தர தென்னை நார் தயாரிக்கப்படுகிறது. தென்னைநாராக 80 சதவீதமும், தென்னைநாரை மதிப்புகூட்டு பொருளாக மாற்றி 20 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. தென்னை நார் தேக்கம், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் தென்னை சார்ந்த தொழில்கள் முடங்கியுள்ளது. பல மாதமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் தென்னை நார் தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
விலை வீழ்ச்சி
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தென்னைநார் விலை 50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.27-க்கு விற்பனையான தென்னை நார் கட்டி ரூ.12- க்கும், ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்ட தென்னை நார் ரூ.5 முதல் ரூ.6 வரைக்கும் தற்போது விற்பனை ஆகிறது. இதனால் சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கண்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த தென்னை நார் ஏற்றுமதி, பொருளாதாரமந்த நிலை, மின் கட்டண உயர்வு என நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் 40 முதல் 50 சதவீதம் வரைஉயர்ந்துள்ளது. மின் கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பது தெரியாமல் உற்பத்தியாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். தென்னை சார்ந்த தொழில்கள் முடங்கியுள்ளதால் ஒரு மாதத்தில் ரூ.600 கோடி வரையிலான பணப்பழக்கம் குறைந்துவிட்டது. ஏற்றுமதி இல்லாததால் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டத்தில் 40 சதவீத தென்னை நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய தேவை
தென்னை நார் தொழிற்சாலைகளில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வங்கிகள் கடனுதவி அளித்தாலும் தென்னை நார் தொழில் பாதிக்கப்பட்டதால் உற்பத்தியாளர்கள் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலை உள்ளது. தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு தேவையான எந்திரங்கள் வாங்குவதற்கு சரக்கு மற்றும் சேவை வரிகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக தென்னை நாரில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். பொருளாதார மந்த நிலை, கண்டெய்னர் தட்டுப்பாடு, மின் கட்ட உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் தென்னை நார் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில் வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல் அருகிலேயே சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.