ஆக்கிரமிப்பை அகற்றியபோது பொக்லைன் எந்திரம் மீது இடிந்து விழுந்த கட்டிடம்
வடமதுரை அருகே ஆக்கிரமிப்பை அகற்றியபோது பொக்லைன் எந்திரம் மீது கட்டிடம் இழுந்து விழுந்தது.
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும், சர்வீஸ் ரோட்டிலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களை கட்டியிருந்தனர். இதுதொடர்பாக எழுந்த புகாரை அடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அய்யலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. அப்போது சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
2-வது நாளாக நேற்று அய்யலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்த 2 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. பொக்லைன் எந்திர ஆபரேட்டராக நல்லுசாமி என்பவர் இருந்தார். கட்டிடத்தை இடித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து பொக்லைன் எந்திரத்தின் மீது விழுந்தது. இதில், பொக்லைன் எந்திரம் சேதமடைந்தது. மேலும் அதிர்ஷ்டவசமாக பொக்லைன் எந்திர ஆபரேட்டர் நல்லுசாமி காயமின்றி உயிர் தப்பினார். ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது கட்டிடம் இடிந்து பொக்லைன் எந்திரம் மீது விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.