இடிந்து விழும் நிலையில் ஆய்வக கட்டிடம்
கடலூர் மாநகராட்சி பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆய்வக கட்டிடத்தை விபத்து ஏற்படும் முன்பு இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆய்வகம்
கடலூர் சில்வர் பீச் ரோட்டில் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 400 மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்த ஆண்டு தமிழக அரசு, மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாவரவியல் ஆய்வகம், விலங்கியல் ஆய்வக கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டிடங்கள் நாளடைவில் பராமரிப்பின்றி சேதமடைய ஆரம்பித்தது. இதனால் இந்த ஆய்வகத்தை பள்ளியின் மேற்கு பகுதி கட்டிடத்திற்கு ஆசிரியர்கள் மாற்றினர். தற்போது, அதில் தான் அனைத்து ஆய்வகங்களும் செயல்பட்டு வருகிறது.
உடைந்து விழுகிறது
இதனிடையே பழைய ஆய்வக கட்டிடத்தில் கொஞ்சம், கொஞ்சமாக மேற்காரைகள் பெயர்ந்து விழ ஆரம்பித்தன. அதில் உள்ள தூண்களும் உடைந்து விழுந்து வருகிறது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் தான் மாணவர்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருக்கிறது. பள்ளி மாணவர்கள் அந்த கட்டிடத்திற்கு அருகில் நின்று தான் விளையாடுகின்றனர். இதனால் எந்நேரமும் அந்த கட்டிடம் விழுந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இடித்து அப்புறப்படுத்த வேண்டும்
அதன்பிறகு அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிவறைகள், பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. ஆனால் அதற்கு பதிலாக கூடுதல் கட்டிடங்களை கட்டித்தரவில்லை. இதனால் சில இடங்களில் போதிய இடவ சதியின்றி மரத்தடியில் பாடம் படிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு கடலூர் மாநகராட்சி பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆய்வக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், கட்டிடத்தை இடிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் இடிக்கப்படும் என்று கூறுகின்றனர். அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு பள்ளிகளில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களையும் மழைக்காலத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.