தம்மம்பட்டி அருகே பரபரப்பு பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதாக கூறி பணம் வசூல்-பெண் உள்பட 3 பேர் துணிகர மோசடி
தம்மம்பட்டி அருகே பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதாக கூறி பெண் உள்பட 3 பேர் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தம்மம்பட்டி:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்துள்ள உலிபுரம் கிராமத்துக்கு டிப்-டாப்பாக 2 வாலிபர்கள், ஒரு பெண் என 3 பேர் வந்தனர். அவர்கள் கிராம ஊராட்சியில் பணியில் இருந்தவர்களிடம் நாங்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருகிறோம் எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து பிரதமர் காப்பீடு திட்டம் உடனடியாக பதிவு செய்து தரப்படும் என்று கூறி ஆதார் அட்டை நகல், புகைப்படம் சேகரித்தனர். அதனுடன் ரூ.30 முதல் ரூ.50 வரை வசூல் செய்தனர். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் பிரதமர் காப்பீடு திட்டத்தில் சேர திரண்டு வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவரிடமும் ஆதார் அட்டை நகல், போட்டோ மற்றும் பணத்தை வசூல் செய்து விட்டு நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம் என்று கூறி விட்டு சென்றனர்.
தொடர்ந்து அதற்கு மறுநாள் உலிபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பு அதே நபர்கள் மக்களிடம் ஆதார் அட்டை நகல், போட்டோ, பணம் வசூல் செய்தனர். இதனை அறிந்த சிலர், முதல் நாள் நாங்கள் பணம் கொடுத்தோம். எங்கள் பெயரை பதிவு செய்து விட்டீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.சந்தேகம் அடைந்த சிலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்படி யாரையும் நாங்கள் அனுப்பவில்லை என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. அதற்குள் அந்த 3 பேரும் அங்கிருந்து நைசாக தப்பி சென்றனர். அதன்பிறகுதான் அந்த நபர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பிரதமர் காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு செய்வதாக கூறி பணம் வசூலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.