பிரதமரின் இலவச வீட்டுமனைக்கு விண்ணப்பிக்க பணம் வசூல்


பிரதமரின் இலவச வீட்டுமனைக்கு விண்ணப்பிக்க பணம் வசூல்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:30 AM IST (Updated: 21 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளப்பட்டியில் பிரதமரின் இலவச வீட்டுமனை திட்டத்தில் விண்ணப்பிக்க பணம் வசூல் செய்த கடை உரிமையாளர்கள் மீது பேரூராட்சி தலைவர் புகார் கொடுத்தார்.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு பேன்சி கடை, பூஞ்சோலை ஹைஸ்கூல் ரோட்டில் உள்ள புகைப்பட ஸ்டூடியோவில் பிரதமரின் இலவச வீட்டுமனை திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அதன்பேரில் பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் மேட்டுப்பட்டியில் உள்ள பேன்சி கடைக்கு சென்று உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரதமரின் இலவச வீட்டுமனையை பெற்று தர முதல்-அமைச்சரின் குறைதீர்ப்பு மையத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ரூ.110 கட்டணம் வசூலிப்பதாக கூறினார்.

இதேபோல் பூஞ்சோலையில் உள்ள ஸ்டூடியோ உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அவரும் பிரதமரின் இலவச வீட்டுமனை திட்டத்துக்கு விண்ணப்பிக்க பணம் பெறுவது தெரியவந்தது. அந்த கடைகளின் உரிமையாளர்களிடம், இதுபோன்ற திட்டம் குறித்து பொதுமக்களிடம் விண்ணப்பம் பெறுவது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கோ, வருவாய்த்துறைக்கோ எந்த தகவலும் வரவில்லை. இதுபோன்று பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்யக்கூடாது என்று பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இனிமேல் யாரிடம் பணம் பெறமாட்டோம். பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை அவர்களிடமே திருப்பி கொடுத்து விடுகிறோம் என்று கடை உரிமையாளர்கள் கூறினர்.

மேலும் இதுகுறித்து கடை உரிமையாளர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னாளப்பட்டி போலீஸ்நிலையத்தில் பேரூராட்சி தலைவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சின்னாளப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story