பணம் வசூலித்து மோசடி செய்த மாற்றுத்திறனாளி வாலிபர் மீது வழக்கு
‘வீல்சேர்’ கிரிக்கெட் அணி இந்திய கேப்டன் என்றும், உலகக்கோப்பையை வென்றுள்ளதாகவும் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
'வீல்சேர்' கிரிக்கெட் அணி இந்திய கேப்டன் என்றும், உலகக்கோப்பையை வென்றுள்ளதாகவும் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி வீரர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூரைச் சேர்ந்தவர் வினோத்பாபு (வயது 32). மாற்றுத்திறனாளியான இவர், சக்கர நாற்காலி (வீல்சேர்)் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் எனவும் பாகிஸ்தானில் நடந்த உலகக்கோப்பை வீல்சேர் கிரிக்கெட்டில், பாகிஸ்தானை வென்று கோப்பையை பெற்றதாகவும் கூறி ஒரு கோப்பையுடன் மாவட்டம் முழுவதும் வலம் வந்தார்.
அடுத்து லண்டனில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள உதவும்படி பலரிடம் கோரிக்கை விடுத்தார். அரசியல்வாதிகள், சமூக அமைப்பினர் என பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்தனர். இதை அறிந்து, உண்மையான வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுபற்றிய தகவல் போலீசாருக்கு தெரியவந்து, விசாரித்தபோது வினோத்பாபுவிடம் பாஸ்போர்ட் கூட இல்லாததும் அவர் வெளிநாடு சென்று வெற்றி பெற்றதாக கூறியது பொய் எனவும் தெரிந்தது.
பணமோசடி
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அண்ணாநகரை சேர்ந்த பாலசுந்தரம் மகன் தினேஷ்குமார் (34) என்பவர், தன்னை மேற்கண்ட வினோத்பாபு, இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்றும், பல போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், லண்டன் செல்ல உதவிடுமாறும் கூறினார். அவர் காண்பித்த கோப்பையை உண்மை என நம்பி மாற்றுத்திறனாளி வீரரை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினேன்.
இந்நிலையில் அவர் எந்த சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்பதும், அவர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கூட பெறவில்லை என்பதும் தற்போது தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். என்னை நம்ப வைத்து ரூ.1 லட்சம் நன்கொடையாக பெற்று மோசடி செய்த வினோத்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
வழக்குபதிவு
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வினோத்பாபு மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வடிவேலு பாணியில் காசு கொடுத்து கோப்பையை வாங்கி வைத்ததுடன், அதன் மூலம் பணம் வசூல் செய்து மோசடி செய்த மாற்றுத்திறனாளி வாலிபர் மீதான நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.