வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்காக 50 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரம் சேகரிப்பு - தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்காக 50 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி, கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்கியது. தமிழகத்தில் வாக்குச் சாவடி முகவர்கள் மூலமாக வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 3.12 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது 50.3 சதவீதமாகும்.
வீடு வீடாகச் சென்று ஆதார் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் சில மாவட்டங்களில் சிறந்த முறையில் களப்பணி ஆற்றி வருகின்றன. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, அரியலூர், தர்மபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிப் பகுதிகளில் வாக்காளர்களிடையே ஆதார் விவரங்களைப் பெறும் பணி தொய்வடைந்துள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்காளர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் பகல் நேரங்களில் வீட்டில் ஒருவர் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஆதார் விவரங்களை எளிதாக வாங்கிவிடலாம்.
ஆனால் நகர்ப்புறங்களில் கணவனும், மனைவியும் பணிக்குச் செல்வதால் வேலை நாள்களில் அவர்களின் ஆதார் விவரங்களைக் கோர முடியாது. இதற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் உள்ளது. நவம்பர் 9-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகளின் போது ஆதார் விவரங்களை பெறுவது எளிதாக இருக்கும். எனவே, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ள குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஆதார் விவரங்களை சேகரித்துவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.