சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்; வாகன ஓட்டிகள் கருத்து
புதிய வாகனச் சட்டப்படி சாலை விதிமீறல்களுக்கு போலீசாரின் அபராதம் கெடுபிடி வசூல் ஏற்புடையதா? என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல்களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம்-1988-ல், கடந்த 2019-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது.
அபராதம் உயர்வு
அந்தப் புதிய வாகனச் சட்டத்தின்படி இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் தலைக் கவசம் (ஹெல்மெட்) அணியாவிட்டால் ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பன உட்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராதத் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு புதிய வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் நகரில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
அபராத தொகையை குறைக்கலாம்
அறிவழகன் (தனியார் நிறுவன ஊழியர், திண்டுக்கல்):- மருத்துவமனை, ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவசரமாக செல்ல வேண்டிய நிலை பலருக்கு ஏற்படும். அப்போது அவர்கள் ஹெல்மெட் அணிய மறப்பது இயல்பே. அந்த சமயத்தில் போக்குவரத்து போலீசாரிடம் அவர்கள் சிக்கினால் அபராதம் விதிப்பார்கள். அது குறைந்த தொகையாக இருந்தது. அதனால் மக்களும் பாதிப்பின்றி அபராத தொகையை செலுத்தினர். ஆனால் தற்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதமாக விதிக்கப்படுகிறது. இது நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதிக்கும்.
கணேசன் (டிராவல்ஸ் உரிமையாளர், திண்டுக்கல்):- டிராவல்ஸ் நடத்துவதால் வாடிக்கையாளர்கள் எப்போதும் செல்போனில் என்னை தொடர்புகொண்டே இருப்பார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற போது செல்போனில் அழைப்பு வரவே, வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்த மறந்துவிட்டு செல்போனில் பேசியபடியே சென்றேன். அப்போது என்னை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் ரூ.100 அபராதம் விதித்துவிட்டனர். ஆனால் தற்போது செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அபராத தொகை உயர்த்தப்பட்டதற்கான பட்டியலை துண்டுபிரசுரமாக போலீசார் வினியோகம் செய்கின்றனர். அதைப்பார்த்ததும் பேரதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று அபராதம் விதித்தால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே அபராத தொகையை குறைக்க வேண்டும்.
அளவோடு இருக்க வேண்டும்
வீரசேகர் (தொழிலாளி, சிறுகுடி):- செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 என அபராத தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. போக்குவரத்து போலீசாரும் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களிடம் இந்த தொகையை தற்போது வசூலிக்க தொடங்கிவிட்டனர். என்னை போன்ற தொழிலாளிக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.1,000 கூட கிடைக்காது. அப்படி இருக்க எங்களை போன்றவர்கள் எப்படி அபராத தொகையை செலுத்த முடியும். அபராதம் விதிக்க வேண்டாம் என்று கூறவில்லை. மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அபராத தொகை விதிக்கலாம்.
சரவணன் (மெக்கானிக், நத்தம்):- போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறைய வேண்டும் என்றால் அபராத தொகையை அதிகரிப்பது சரிதான். ஆனால் அதுவும் அளவோடு இருக்க வேண்டும். வாகன ஓட்டிகளின் நிலைமைக்கு ஏற்றாற்போல் அபராத தொகை விதிக்கலாம். அதாவது வசதி படைத்தவர்களுக்கு இதுபோன்று கூடுதலாக அபராத தொகை விதிக்கலாம். நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அவர்களின் வருமானத்துக்கு ஏற்ப அபராத தொகையை நிர்ணயம் செய்யலாம். அப்போது அபராதம் செலுத்துவதற்கு பயந்து அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தொடங்குவார்கள்.
அச்சுறுத்தவில்லை
குகன் (ஓட்டல் உரிமையாளர், பழனி):- போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளை பெரிதும் அச்சுறுத்தி உள்ளது. தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்ற அடிப்படையில் நமது உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் கூடுதல் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் ஹெல்மெட் அணிவதால் சிலருக்கு தலைவலி, தலைமுடி கொட்டுதல் போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இருந்த போதிலும் தற்போது அபராதத்துக்கு பயந்து ஹெல்மெட் அணிந்தபடி செல்ல வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு அபராத தொகையை குறைக்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதற்காக புதிய வாகன சட்டத்தின் மூலம் அபராதம் விதிக்கப்படுவதில்லை. வாகன விபத்துகளால் ஏற்படும் உயிர்பலியை குறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.